Tuesday, August 9, 2016

...

இவ்வறைக்குள் 
திணறும் சுவாசத்தை 
இந்த ஜன்னல் வழியாக 
எங்கேயனுப்பலாம் ?

Friday, March 4, 2016

மஸ்ய ராணி

நீளும் என் இரவுகள்
ஒரு கண்ணாடி ஜாடிக்குள் 
சமுத்திரமென
சஞ்சரிக்கையில்
மஸ்ய ராணியாய்
சயனித்திருக்கிறேன்
தங்கநிற மயிர்கற்றைகளை
கோதியவாறு புறப்படும்
உன் புகார்கள்
இப்பொழுதில்
என் செவி சேர்வதில்லை
பகிரங்கமாய்
அறிவிக்காவிடினும்
சரணடையும்
உன் புலன்களில்
பொறிக்கிறேன்
நீ அறிந்தேயிராத
என் தரப்பை
ஆறாக் காயங்களின் சீழை
மாறின் இடையோடும் உப்பு நீர்
கழுவிச் செல்லுகையில்
பேரிரைச்சலோடு
இளைப்பாறத் துவங்குகிறேன்

Saturday, February 27, 2016

...

சாயந்திர நடையில் 
பதிவாக 
தோளமர்ந்து வருகிறது 
ஒரு வண்ணத்துப்பூச்சி 

அரக்கும் 
வெளிர் மஞ்சளும் 
வெள்ளை புள்ளிகளும்
குறுக்கில் சாம்பல் நிற 
கீற்றுகளும்
கொண்டதாய் உள்ள
அழகான 
இவ்வண்ணத்துப்பூச்சிக்கு 
இல்லை 
நிறங்கள் குறித்தான 
அனுமானங்கள் 









Monday, November 10, 2014

....

மழைக் கம்பிகளை
இலகுவாய் பற்றி
வானம் புக
ஆயத்தமாகிறது
சற்று முன்
குளமாய் மாறிய
என் தேகம்

Monday, September 15, 2014

அனக்கங்களற்ற நதி

நானற்று நீ நடந்த
அந்த ஏழாவது அடியில்
பிறக்கிறது
ஓர் அனக்கங்களற்ற நதி

நேற்றிரவு அனிச்சையாய்
படர்ந்தது வரை
நமதான ஸ்பரிசங்கள் யாவும்
இலைகளாய் உருக்கொண்டு
மிதக்கின்றன

ஸ்தம்பித்த மேகங்களின்
கடைசி காதற்துளி
இனி ஏற்படுத்த போவதில்லை
எந்தவொரு அதிர்வையும்
ஏதாவதொரு நீர்த்திவலையையும்

எனினும்
தீர்க்கமாய் தெரிகின்ற
என் பிரதி பிம்பத்தில்
மிக சமீபத்தில்
நீ

Friday, October 26, 2012

:)

x
வலியறியும்
கண்ணீர் உறுஞ்சும்
வெளிரும் காதலறியும் 
தாளாத பிரிவும் புரியும் 

எல்லாம் க்ரஹித்த பின்பும் 
என் அடிவயிற்றை
சிநேகத்தோடு ஸ்பரிசிக்க 
விளைந்திராத
உன் பிஞ்சு பாதங்களுக்கு 
மட்டுமியலும் 

Monday, February 13, 2012

...




கொஞ்சம் அருகிலமர்
தலை கோது
மூக்கில் உரசு
புன்னகை
நான் முத்தமிடுகிறேன்

Saturday, April 16, 2011

!

சுயவிரக்கதின் ஜ்வாலை
என் பாதங்களில்
பற்றத் துவங்குகையில்
கசிகிறது
இறப்பின் விசும்பல்கள்

கர்வத்தின் பெருமழை
என் சிரசினின்று
பொழியத் துவங்குகையில்
பீறிடுகிறது
சிருஷ்டியின் பிரவாகம்

முரண்களின்
மொத்தமும்
என்னில்

நான்
பூரணமானவள்

Friday, October 22, 2010

....

நடக்க யத்தனிக்கும்
குழந்தைகள் பறவைகள்
அவர்கள்
அறியாமற் பதிக்கின்ற
ஒவ்வொரு அடியிலும்
பிறக்கிறது
மற்றுமொரு வானம்

Wednesday, October 6, 2010

:)

விடாது பொழியும்
மழை விட்டுச் செல்லக்கூடும்
வானவில்லை
சிலநேரங்களில்
கவிதையையும்